

பாட்னா: பிஹார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தன் மிஸ்ரா மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாகல்பூர் சிறையில் இருந்த இவர், சமீபத்தில் சிகிச்சைக்காக பரோலில் விடுவிக்கப்பட்டார். பாட்னா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 17-ம் தேதி மருத்துவமனைக்குள் புகுந்த 5 பேர் கும்பல் அவரை சுட்டுக் கொன்றது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், மருத்துவமனை வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொலையாளிகளை தேடி வந்தனர். அவர்களுடைய செல்போன் சிக்னல் களை வைத்து கொல்கத்தா அருகே உள்ள நியூடவுன் என்ற செயற்கைக்கோள் நகரத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கொல்கத்தா விரைந்த பாட்னா போலீஸார், மேற்கு வங்க போலீஸாருடன் இணைந்து நியூடவுன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த 5 பேரையும் நேற்று காலையில் கைது செய்தனர். அவர்களை பாட்னாவுக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.