

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் ,லக்னோவில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் ஆறரை கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒரு ரயில் வந்தடைந்தது.
அதில் இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தபோது, ஒரு இளைஞர் மீது ரயில்வே போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து, அவரது பையை வாங்கி, திறந்து பார்த்தபோது, அதில் மூன்று கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. ஆறரை கிலோ எடைக்கொண்ட இதன்மதிப்பு ரூ.1.30 லட்சம் ஆகும். இதையடுத்து, அவரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர்.
அதில், அந்த நபர் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சந்திரமெளலி (23) என்பதும், விஜயவாடாவில் இருந்து ரயிலில் சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்ததும், சென்னை அசோக்நகரில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.