

மயிலாடுதுறை: காவல் துணைக் கண்காணிப்பாளரின் வாகனம் பறிக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், காவல் துறை நடத்தை விதிகளை மீறியதாக டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்யுமாறு, மத்திய மண்டல ஐ.ஜி.க்கு, டிஐஜி பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் தனது அரசு வாகனத்தை அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புப் பணிக்காக மாவட்ட காவல் துறை தரப்பில் கேட்டதாகவும், உரிய ஆணை இல்லாமல் வழங்க முடியாது என்று கூறியதால், வெளியூர் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பிவிட்டு, வாகனத்தை பறித்துக் கொண்டதாகவும், அலுவலகத்துக்கு நடந்தே சென்றதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
வீட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகத்துக்கு நடந்து சென்ற காட்சிகள் சமூக ஊடகங்களிலும் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டிஎஸ்பி, தான் நேர்மையாகப் பணியாற்றுவதால் தொடர்ந்து உயரதிகாரிகள் நெருக்கடி தருவதாகவும், வளைந்து கொடுத்து போகுமாறு எஸ்.பி. கூறியதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இவரின் புகார்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் இன்று மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் அன்னை அபிராமி, ஜெயா உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர், நடத்தை விதிகளை மீறியும், உரிய அனுமதியின்றியும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது, காவல் துறையினருக்கான நடத்தை விதிகளை தொடர்ந்து மீறியிருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அவரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி-க்கு டிஐஜி அறிக்கை அனுப்பியிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன? - வீடியோ ஸ்டோரி இங்கே...