

மதுரை: கணவரை கொடூரமாகத் தாக்கிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை காவல் ஆணையரிடம் பெண் புகார் அளித்துள்ளார். மதுரை காமராஜர் புரத்தைச் சேர்ந்தவர் நந்தினி.
இவர், மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் வடிவேல், கீரைத்துறையில் உள்ள அரிசி அரைவை ஆலையில் சுமைப் பணியாளராக பணிபுரிகிறார். கடந்த 16-ம் தேதி இரவு எனது வீட்டுக்கு முன்பு நான் நின்றுகொண்டிருந்தபோது, வீட்டுக்கு அருகில் உள்ள ஆயுதப்படைக் காவலர் லட்சுமணன் குடிபோதையில் என்னை அவதூறாகப் பேசினார். இதை எனது கணவர் தட்டிக்கேட்டார். இதையடுத்து, கணவரை லட்சுமணன் கொடூரமாகத் தாக்கினார்.
மேலும், மடப்புரம் காவலாளி அஜித்குமாரை போல, எனது கணவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். பின்னர், விசாரணை என்ற பெயரில், எனது கணவரை கீரைத்துறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனவே, கணவரைத் தாக்கிய போலீஸ்காரர் லட்சுமணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.