

திருவாரூர்: திருவாரூர் அருகே அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது தெரியவந்தது. மதுபோதையில் இச்செயலில் ஈடுபட்ட 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் அடுத்த காரியாங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காரியாங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். காலை உணவு திட்டத்துக்கு சமைப்பதற்காக சமையலர்கள் நேற்று பள்ளிக்கு சென்றபோது, சமையல் அறையில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு, மளிகை பொருட்கள் சிதறி கிடந்தன. பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் மூடி உடைக்கப்பட்டு, அந்த தொட்டியில் மனித கழிவு கலக்கப்
பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், பள்ளி முன்பு ஊர் மக்கள் திரண்டனர். இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் அன்புச்செல்வி அளித்த புகாரின்பேரில், திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உடனே காவல் துறையின் மோப்ப நாய் ட்ரிக்ஸி வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. அது மோப்பம் பிடித்தவாறு சென்று அதே ஊரில் ஒரு வீட்டில் படுத்துக்கொண்டது. இதையடுத்து, அந்த வீட்டில் இருந்த 2 சகோதரர்கள் மற்றும் அதே ஊரை சேர்ந்த ஒருவரை போலீஸார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘3 பேரும் மதுபோதையில் இந்த செயலில்ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது’’ என்றனர். மாவட்ட எஸ்.பி. கருண் கரட் மேற்பார்வையில் திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் விசாரித்து வருகிறார் எனமாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.