

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுந்த மாவடியில் நேற்று காலை வழக்கம்போல படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டத்தைச் சேர்ந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜு(52) காரிலிருந்து தாவும் காட்சியில் நடித்துள்ளார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவரை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், கீழையூர் போலீஸார் மோகன்ராஜு உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.