

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கில், அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சேவூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, மகன் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் நேற்று கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகள் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணை தொய்வாக போகிறது. சாதாரண தற்கொலை வழக்கு, கொடுமை வழக்காக போட்டு இருக்கின்றனர். சரியான சட்டப் பிரிவுகளை சேர்த்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம். இன்னும் பரிசோதனை அறிக்கை வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணை அதிகாரி மேல் சந்தேகம் வருகிறது.
எனவே, இவ்வழக்கில் தனி விசாரணை அதிகாரி வேண்டும் எனவும் கேட்டுள்ளோம். மேலும், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். லேப் ரிப்போர்ட், ஆடியோ ரிப்போர்ட் உள்ளிட்டவை வந்தவுடன் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆடியோ ஆதாரங்கள் இருந்தும் உரிய சட்ட பிரிவுகளை சேர்க்கவில்லை. சமூக வலைதளத்தில் தவறான கருத்துகளை பகிர்வது வருத்தம் அளிக்கிறது. நீதிக்கான தகவல்களை பரிமாறி எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.