

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், பெத்தமோசான் பல்லி எனும் கிராமத்தில் கடந்த 7-ம் தேதி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ராமவ்வா (60) என்ற மூதாட்டி மீது கார் மோதியதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து ராமவ்வாவின் மருமகன் வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸாரும் விபத்து நடந்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணையில் உண்மை வேறுவிதமாக இருந்தது. சம்பவத்தன்று நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ராமவ்வாவை வெங்கடேஷ் அழைத்துச் சென்றுள்ளார். பிறகு அவரை மட்டும் வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
முன்னதாக, வெங்கடேஷ் வாடகைக்கு ஒரு கார் எடுத்து அதனை தனது நண்பர் கருணாகரிடம் கொடுத்து ராமவ்வா மீது காரை மோதிவிட்டு தப்பிச் செல்லுமாறு கூறியுள்ளார். ராமவ்வா இறப்புக்கு பிறகு வரும் ரூ.60 லட்சம் காப்பீடு பணத்தை சரிபாதியாக பிரித்துக் கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்த திட்டத்தின்படி ராமவ்வா கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேஷ், கருணாகர் ஆகிய இருவரையும் போலீஸார் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.