

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகேயுள்ள சிறுபுலியூரை சேர்ந்தவர் சிங்காரவேலு(48). வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். இவர், பாவட்டக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியனிடம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
அசல் தொகையில் ரூ.35 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்து விட்ட நிலையில், மீதிப் பணத்தை வட்டியுடன் சேர்த்து தருமாறு கூறி, சிங்காரவேலுவை சுப்பிரமணியன் தரப்பினர் கடந்த 6-ம் தேதி தாக்கியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் இரு தரப்பினரையும் அழைத்து பேரளம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்பின், மறுநாள் காலை தனது வெல்டிங் பட்டறையில், சிங்காரவேலு தின்னரை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, சுப்பிரமணியன் தரப்பைச் சேர்ந்த செந்தில்(48), விஜயன்(50) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிங்கார வேலு நேற்று உயிரிழந்தார். அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டபோது, பேரளம் கடைவீதியில் ஆம்புலன்சை மறித்த உறவினர்கள், காவல் ஆய்வாளர் திட்டியதால்தான் சிங்காரவேலு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.