

கோவை: கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், 18-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தலைமறைவாக இருந்த உக்கடம் பிலால் நகரைச் சேர்ந்த டெய்லர் ராஜா(48), கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் பதுங்கி இருந்தபோது நேற்று முன்தினம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான டெய்லர் ராஜா மீது சிறைத்துறை அதிகாரிகள் பூபாலன், ஜெயப்பிரகாஷ் மற்றும் நாகூரில் பெண் ஒருவரை கொலை செய்த வழக்கு ஆகியவையும் நிலுவையில் உள்ளன.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: டெய்லர் ராஜா வெடிகுண்டு தயாரிப்பதில் மிகவும் திறமையானவர். கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பே கோவை, மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி சிறை வார்டர்களை கொலை செய்துள்ளார். குறிப்பாக அவர் டெட்டனேட்டர்களை பயன்படுத்தி வெடிகுண்டு செய்வதில் கைதேர்ந்தவர்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில், வெடிமருந்துகளை சரியான விகிதத்தில் பயன்படுத்தி பல்வேறு வகையான வெடிகுண்டுகளை தயாரித்து, வெடிக்க செய்ய இவர்தான் கொடுத்து இருக்கிறார். அந்த வெடிகுண்டுகளை எங்கு வைப்பது? எந்த நேரத்தில் வெடிக்க செய்வது?, இதற்காக யாரை அனுப்புவது? என்று ஆலோசனை வழங்கி செயல்பட்டு உள்ளார்.
கோவை சம்பவம் நடந்த பிறகு டெய்லர் ராஜா, பல்வேறு பகுதிகளுக்கு சென்று தலைமறைவாக இருந்துள்ளார். கடைசியாக கர்நாடகாவில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் எந்த பகுதிக்கு சென்றாலும் தனது பெயரை மாற்றி உள்ளார். அத்துடன் அதற்கான ஆவணங்களையும் தயாரித்து இருக்கிறார்.
அதுபோன்று அவர் பலமுறை கோவைக்கு வந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே, அவர் எதற்காக கோவை வந்தார்? தலைமறைவாக இருந்த அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம், என்றனர்.