

பொன்னேரி: சோழவரம் அருகே வாகனம் இயக்கத் தெரியாத தனியார் கூரியர் நிறுவன ஊழியர் இயக்கிய சரக்கு வாகனம் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் உள்ள தனியார் கூரியர் நிறுவன சேமிப்பு கிடங்குக்கு நேற்று மாலை சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது சரக்கு வாகனத்தை, ஓட்டுநரான தென்காசியைச் சேர்ந்த கருப்பசாமி (23) நுழைவு வாயில் முன்பு நிறுத்திவிட்டு, வாகனத்தில் இருந்து கீழே இறங்கி, அந்நிறுவன காவலாளியான ஒரக்காடு பகுதியைச் சேர்ந்த பிரபு-விடம் (50) உள்ளே வாகனத்தை கொண்டு செல்ல அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, சரக்கு வாகனத்தில் இருந்த, வாகனம் இயக்கத் தெரியாத கூரியர் நிறுவன ஊழியரான, கிளீனர் ரூபன், ஓட்டுநர் பயிற்சி பெறும் நோக்கில், சரக்கு வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது, ரூபனின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் எதிரே நின்று கொண்டிருந்த காவலாளி பிரபு மற்றும் ஓட்டுநர் கருப்பசாமி ஆகிய இருவர் மீதும் மோதி சுவற்றில் இடித்தது. இதனிடையே, விபத்தில் சிக்கிய இருவரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். விபத்து குறித்து, தகவலறிந்த சோழவரம் போலீஸார், பிரபு, கருப்பசாமி ஆகிய இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், விபத்தை ஏற்படுத்திய ரூபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.