

சென்னை: சென்னை அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த மாதம் 30-ம் தேதி அரும்பாக்கம், வல்லவன் ஓட்டல் அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு சட்டவிரோதமாக மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த அந்தோணி ரூபன் (29), தீபக்ராஜ் (25) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கடந்த 2-ம் தேதி இமானுவேல் ரோஹனும் (23), மறுநாள் வளசரவாக்கம் அரவிந்த் பாலாஜி (31), ஐயப்பந்தாங்கல் சுபாஷ் (30) ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5-ம் தேதி கோடம்பாக்கம் அஜித் கண்ணன் (30) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக 7-வது நபராக நேற்று முன்தினம் விருகம்பாக்கம், சின்மயா நகரைச் சேர்ந்த ஈஸ்வர் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஈஸ்வர் ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு, சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கிளைம் மருத்துவராக பணிபுரிந்து வருவதும், இவர் ஏற்கெனவே கைதான இமானுவேல் ரோஹனிடம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.