

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த டெய்லர் ராஜா, 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். 1998-ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 58 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தனர்.
இவ்வழக்கில் அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்த பாஷா உட்பட 160-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், உக்கடம் பிலால் காலனியைச் சேர்ந்த டெய்லர் ராஜா (எ) ஷாஜகான் ஷேக் (48), முஜிபுர் ரஹ்மான் ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இருவர் குறித்த தகவல்களைத் தெரிவித்தால் ரூ.2 லட்சம் லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், கோவை குண்டுவெடிப்பு வழக்கு, மேற்கு மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையிலான போலீஸார் இருவரையும் தேடி வந்தனர். கடந்த வாரம் ஆந்திராவில் பதுங்கியிருந்த அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து கிடைத்த தகவல்கள் அடிப்படையில், கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை ஜே.எம்.5-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டெய்லர் ராஜாவை, வரும் 24-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகள் கூறும்போது, “1996-ல் கோவை சிறை ஜெயிலர் பூபாலன் பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டார். அதே ஆண்டில்,நாகூரில் சயிதா, 1997-ல் மதுரையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான டெய்லர் ராஜா தலைமறைவாக இருந்தார்.
அல்-உம்மா இயக்கத்தில் தீவிரமாக இருந்த அவர், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு வெடிமருந்து சப்ளை செய்ததில் முக்கியப் பங்கு வகித்தார். 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.
முதல்வர் ஸ்டாலின் பாராட்டு: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “2023-ல் தீவிரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) உருவாக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல் துறை, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநில காவல் துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட 3 முக்கிய தீவிரவாதிகளை ஏடிஎஸ் கைது செய்துள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழக காவல் துறை முன்னிலை வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள தீவிரவாத தடுப்புப் படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார்.