

சென்னை: திரைப்படங்களுக்கு பயன்படுத்தப்படும் போலி பணத்தை வங்கியில் செலுத்த முயன்றவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள வங்கி ஒன்றுக்கு 40 வயதுடைய ஆண் நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் வந்தார். அவர் பையில் வைத்திருந்த ரூ.5.11 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்த முயன்றார்.
சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர்கள் அதை பரிசோதித்து பார்த்தபோது அவை அனைத்தும் போலி ரூபாய் நோட்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிண்டி போலீஸார் சம்பவ இடம் விரைந்து சென்று போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், பிடிபட்டது கடலூரை சேர்ந்த செந்தில் குமார் (44) என்பதும், சென்னை, பம்மலை சேர்ந்த சாம் பிரவீன் சந்தன்ராஜ் (44) என்பவர் இந்த பணத்தை கொடுத்து அனுப்பியதும், மேலும், இந்த பணம் திரைப்படங்களுக்கு பயன்படுத்தப்படும் போலி பணம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.