

விழுப்புரம்: ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இணைய வேண்டும் என வலியுறுத்தி திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டின் முன்பு 6 தொண்டர்கள் தீக்குளிக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
உச்சக்கட்ட மோதல் அதிகரித்துள்ள நிலையில், பாமக மாநில செயற்குழுக் கூட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் ராமதாஸுக்கு பக்கபலமாக உள்ளவர்கள். தலைவர் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை.
செயற்குழுக் கூட்டம் முடிந்ததும், தைலாபுரத்துக்கு ராமதாஸ் திரும்பினார். அவரை சந்திக்க தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோர் தைலாபுரத்தில் திரண்டனர். இந்நிலையில், பாமகவினர் 6 பேர் திடீரென ஒரு கேனில் இருந்த பெட்ரோலை தங்களது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், பெட்ரோல் கேனை பறித்து, அவர்களது செயலை தடுத்தனர்.
முன்னதாக 6 நபர்களில் ஒருவர் பேசும்போது, “ராமதாஸும், அன்புமணியும் இணைய வேண்டும். இதற்காக நாங்கள் உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். பாமக மாநில செயற்குழு கூட்டத்தில் தலைவர் அன்புமணி பங்கேற்காதது வருத்தமாக உள்ளது. ஒவ்வொரு தொண்டனுடைய வலி. வேதனையை அனுபவித்து வருகிறோம். ராமதாஸும், அன்புமணியும் இணைந்தால்தான் கட்சி வளர்ச்சியடையும். இதனால் நாங்கள் மன உளைச்சலில் உள்ளோம்” என்றார்.
இதையடுத்து 6 பேரும் கிளியனூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் வசிக்கும் தமிழ்செலவன், கார்த்திக், விஜயன், முருகன், ஜெகதீசன், சின்னக்குட்டி ஆகியோர் என்பதும், தலைவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர்.