

சென்னை: புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸாரை பழிவாங்கும் நோக்கத்தில், டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 5-ம் தேதி மாலை, சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டறையின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசிய நபர், ”டிஜிபி அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப்பாருங்கள்’ எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், போலீஸாரையும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மெரினா போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உடன் டிஜிபி அலுவலகம் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனை முடிவில் சந்தேகப்படும் படியான எந்தப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. அதன் பிறகே புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் துப்பு துலக்கப்பட்டது. இதில், மிரட்டல் விடுத்தது சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த தவசிலிங்கம் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
மிரட்டலுக்கான காரணம்: மிரட்டல் விடுத்தது ஏன் என கைதான தவசி லிங்கம் கூறுகையில், “எனக்கும் மனைவிக்கும் குடும்பப் பிரச்சினை உள்ளது. இதனால், கோபித்துக் கொண்டு மனைவி பிரிந்து சென்று விட்டார். மனைவியை சேர்த்து வைக்கும்படி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. சிவகங்கை எஸ்பி அலுவலகத்திலும் புகார் தெரிவித்தேன். அங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.
போலீஸார் என்னை அலைக்கழித்தனர். இதனால், ஏற்பட்ட விரக்தியில் போலீஸாரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தவசி லிங்கம் வாக்கு மூலமாக தெரிவித்ததாக” போலீஸார் கூறியுள்ளனர்.