

விருதுநகர்: விருதுநகரில் கல்லூரி பேருந்தும், மணல் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். கல்லூரி மாணவ, மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர்.
அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதியில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் கல்லூரி பேருந்து ஒன்று கிருஷ்ணன் கோயில் நோக்கி சென்றது. விருதுநகர்- அழகாபுரி விளக்கில் பேருந்து திரும்பிய போது, எதிரே மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநரான விருதுநகர் யானை குழாய் தெருவை சேர்ந்த தங்க மாரியப்பன் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கல்லூரி பேருந்து ஓட்டுநர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விருதுநகர் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.