

சென்னை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்திய இருவரை சென்ட்ரல் ரயில்வே போஸீஸார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் சிறப்பு காவல் ஆய்வாளர் குருசாமி மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தின் 5-வது நடைமேடைக்கு ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஒரு விரைவு ரயில் வந்தது. அதில் இறங்கிவந்த பயணிகளை போலீஸார் கண்காணித்தனர்.
அப்போது, இருவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாகப் பேசியுள்ளனர். இதையடுத்து, அவர்களின் பைகளை சோதித்தபோது, 13 கிலோ கஞ்சா எடை கொண்ட பொட்டலங்கள் இருந்தன. இதன்மதிப்பு ரூ.2.30 லட்சம் ஆகும். தொடர்ந்து, அவர்களை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் சிவகங்கை மாவட்டம் நேரு பஜாரை சேர்ந்த விஷ்ணுவர்தன் (23), சிவகங்கை திருப்புவனத்தை சேர்ந்த ஹைம்நாத் பாபு (22) ஆகியோர் என்பதும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கஞ்சா பொட்டலங்களை வாங்கி, ரயிலில் கொண்டுவந்ததும், பின்னர் மதுரைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். மேலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.