கோவை: கணவர் உயிரிழந்தது தெரியாமல் 5 நாளாக சடலத்துடன் தங்கியிருந்த மனைவி!

கோவை: கணவர் உயிரிழந்தது தெரியாமல் 5 நாளாக சடலத்துடன் தங்கியிருந்த மனைவி!

Published on

கோவை தெற்கு உக்கடம் கோட்டைப்புதூர் காந்திநகரை சேர்ந்தவர் சேட் என்கிற அப்துல் ஜாபர்(48). இவரது மனைவி சமீம் நிஷா(45). இவர்களுக்கு ஷாருக்கான் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அப்துல் ஜாபர் கூலி வேலை செய்து வந்தார். மதுப் பழக்கமுடைய அப்துல் ஜாபர், சரியாக வேலைக்கு செல்வது இல்லை என்று கூறப்படுகிறது. ஷாருக்கானும், அவருடைய சகோதரியும் அருகில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், ஷாருக்கானின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் நேற்று முன்தினம் ஷாருக்கானிடம் தெரிவித்தனர். உடனடியாக அவர் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

அங்கு தந்தை அப்துல் ஜாபர் கட்டிலில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது உறவினர்களுக்கும், கடைவீதி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அப்துல் ஜாபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘அப்துல் ஜாபர் உயிரிழந்து 5 நாட்கள் இருக்கும். அவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் தனது கணவர் உயிரிழந்ததுகூட தெரியாமல் சடலத்துடன் 5 நாட்கள் இருந்துள்ளார்” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in