

சூலூர் அருகே தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டி, அவரது மனைவியிடம் நகையை பறித்துச் சென்ற மூன்று நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை சின்னியம்பாளையம் அருகேயுள்ள அத்தப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (43). இவர், கோவை மாநகர காவல்துறையின் ‘க்யூ’ பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி, தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பார்த்திபனும், ரேவதியும் சூலூர் எல் அண்ட் டி புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டனர். பின்னர், ஹோட்டல் அருகேயுள்ள ஒரு மைதானத்தில் காரை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 3 பேர், அரிவாளைக் காட்டி பார்த்திபன் மற்றும் அவரது மனைவியை மிரட்டியுள்ளனர். அவர்களை பிடிக்க பார்த்திபன் முயன்ற போது, அரிவாளால் பார்த்திபனின் தலை மற்றும் கையில் வெட்டியுள்ளனர். தொடர்ந்து அவரிடமும், ரேவதியிடமும் இருந்த தங்கச் சங்கிலி, பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட 6 பவுன் நகைகளை பறித்தனர். ரேவதி ஒரு நபரின் கையில் இருந்த ஆயுதத்தை போராடி பறித்துள்ளார். தனது கணவர் போலீஸ் என அவர் கூறியதும், நகைகளுடன் மூவரும் தப்பினர்.
இதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறை மூலமாக சூலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். காயமடைந்த தலைமைக் காவலர் பார்த்திபன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதுலுதவிக்குப் பின், சாயிபாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான சூலூர் போலீஸார் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின் பேரில் மூவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.