

தாம்பரம்: தாம்பரத்தில் நகை பெற்று மோசடி செய்த நபரிடம் நகையை திருப்பி கேட்டபோது கல்லால் தாக்கியதில் முதியவர் காயம் அடைந்தார். இதுதொடர்பாக, மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு தாம்பரம், திருநீர்மலை சாலை, ராஜகோபால் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (33). இவரிடம், அப்பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் லோகேஷ் (எ) கிஷோர் (33) என்பவர் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு அவசர பண தேவைக்காக 6 சவரன் நகையை பெற்றுள்ளார். பின்னர், அவர் பெற்ற நகையை திருப்பி தராததால் விக்னேஷ், கிஷோரிடம் பலமுறை நகையை திருப்பி கேட்ட போது கிஷோர் நகையை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு விக்னேஷ். கிஷோரை தொடர்பு கொண்டு நகை குறித்து கேட்டுள்ளார். அப்போது, இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கிஷோர் அவரது மனைவியுடன் விக்னேஷ் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த கிஷோர் கீழே இருந்த கல்லை எடுத்து விக்னேஷை நோக்கி அடித்துள்ளார். அப்போது அந்தக் கல் விக்னேஷின் தந்தை குமார் (55) என்பவரின் நெற்றியில் பட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு 17 தையில் போடப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் நிலைய போலீஸார், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் கிஷோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிமுக பிரமுகர் கிஷோர் தாம்பரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பலரிடம் நகைப் பெற்று பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மட்டும் சுமார் ரூ.4 கோடி அளவுக்கு நகை மோசடியில் ஈடுபட்டதும், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் பெற்று வாகனம் வாங்கி அந்த வாகனத்திற்கான லோன் பணத்தை செலுத்தி விட்டது போல் தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்து என்ஓசி பெற்று மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாம்பரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பலரிடம் நகைகள் பெற்று பல கோடி ரூபாய் மோசடியில் கிஷோர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.