சென்னை விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்!
Updated on
1 min read

சென்னை: விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணி அளவில் இ-மெயில் ஒன்று வந்தது. அதில், ‘சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த குண்டுகள் வெடித்து சிதறும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சென்னை விமான நிலைய பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம், விமான நிலைய இயக்குநர் தலைமையில் நடந்தது. விமான பாதுகாப்பு துறையான பிசிஏஎஸ் எனப்படும் பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிறுவனங்களின் அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள், விமான நிலைய போலீஸ் அதிகாரிகள், அதிரடி படையினர் உள்ளிட்ட பல தரப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், விமான நிலைய போலீஸார் உட்பட அனைவரும் பகல் 1 மணி வரை விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் இல்லாததால். இது வழக்கமாக வரும் புரளி என்று உறுதி செய்தனர்.

இதுதொடர்பாக, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில் இ-மெயில் மிரட்டல் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் புரளியால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in