

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைக்காட்டிபுதூர் ஜெயம் கார்டனை சேர்ந்தவர் கவின்குமார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). கடந்த 28-ம் தேதி மொண்டிபாளையம் அருகே காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக அவர் அனுப்பிய ‘வாட்ஸ் - அப்’ ஆடியோ அடிப்படையில், ரிதன்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாமியார் சித்ரா தேவியை நேற்று முன்தினம் சேவூர் போலீஸார் கைது செய்தனர். அவரை, சேவூர் காவல் நிலையத்தில் இருந்து மருத்துவப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்து சென்றனர்.
அப்போது, சித்ரா தேவியைப் போன்றே உருவ அமைப்பு கொண்ட அவரது உறவுக்காரப் பெண்ணும் அங்கு வந்திருந்தார். அவர், சித்ரா தேவியின் அருகிலேயே இருந்ததால், யார் சித்ரா தேவி ? என்பது தெரியாமல் பத்திரிகையாளர்கள் குழப்பமடைந்தனர். சித்ரா தேவி போன்றே உருவ அமைப்புள்ள பெண், மருத்துவமனைக்கு வந்த காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.