

கரூர்: நிலம் வாங்கி தருவதாகக்கூறி வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்த புகாரில் அதிமுக கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பாலமுருகன் இன்று காலை கைது செய்யப்பட்டார். நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை கைது செய்த போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் வாங்கலை சேர்ந்தவர் பாலமுருகன் (52). அதிமுக கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவரான இவர் தற்போது கட்சியின் கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரகுநாதனுக்கு நிலம் வாங்கித் தருவதாக ரூ.96 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு காலக்கெடு முடிந்த பிறகும் நிலம் வாங்கிக் கொடுக்காமல் காலதாமதம் செய்துள்ளார்.
இது குறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ரகுநாதன் அளித்திருந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் இன்று காலை கைது செய்தனர். வாங்கல் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாலமுருகனை வாங்கல் மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து பாலமுருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு சென்று பாலமுருகனைச் சந்தித்துத் திரும்பினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இது திமுகவின் வழக்கம்: இதுகுறித்து மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “அதிமுக விவசாய அணி செயலாளர் பாலமுருகனை நில விவகார கொடுக்கல், வாங்கலில் நடைப்பயிற்சி சென்றவரைக் கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை சென்று சந்தித்து வந்தோம். நடைப்பயிற்சி செல்பவர்களைக் கைது செய்வதுதான் திமுக அரசின் வழக்கமாக உள்ளது.” என்றார்.