

சென்னை: வீட்டு வேலை செய்ய வைத்து தொடர் சித்ரவதைக்கு உள்ளானதால் விரக்தியடைந்த 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மாணவியின் தந்தை மற்றும் சித்தி கைது செய்யப்பட்டனர்.
ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் எலிகன் தெருவைச் சேர்ந்தவர் அமர்நாத்(45). இவரது மனைவி சங்கீதா. இத்தம்பதிக்கு பிரதிஷா (21), நந்தினி (17) என 2 மகள்கள். கருத்து வேறுபாடு காரணமாக சிலஆண்டுக்கு முன்பு சங்கீதா, கணவரை பிரிந்துசென்று விட்டார். இதனால் பிரதிஷா, தனது பெரியம்மாவுடனும், நந்தினி, தந்தை அமர்நாத்துடனும் வசித்து வந்தனர்.
இதற்கிடையே உஷா என்ற பெண்ணை அமர்நாத் திருமணம் செய்து கொண்டார். நந்தினி, மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நந்தினியை வீட்டுவேலை செய்யும்படி உஷா சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அமர்நாத் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் நந்தினி, மன அழுத்ததுடனும், விரக்தியுடனும் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த ஓட்டேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நந்தினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தற்கொலைக்கு தூண்டியதாக சித்தி உஷா, தந்தை அமர்நாத் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்கொலை தீர்வல்ல… தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் அதை தடுக்கும் வகையில் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24/7), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24/7), ஐகால் உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ள போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.