

கிருஷ்ணகிரி: சிறுவன் கொலை வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் மகன் ரோஹித் (13). அங்குள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்த இச்சிறுவன் நேற்று முன்தினம் திருமொடுக்கு கீழ்பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி, மாவனட்டியைச் சேர்ந்த மாதேவன் (21), கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் உனுசனஅள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாதேவன் (21) மற்றும் ஒரு கல்லூரி மாணவி ஆகியோரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “மாவனட்டி மாதேவனும், ஒரு கல்லூரி மாணவியும் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததை ரோஹித் பார்த்ததால், இருவரும் மற்றொரு மாதேவனுடன் சேர்ந்து சிறுவனைக் கொன்றுள்ளனர்” என்றனர்.
தலைமை காவலர் இடமாற்றம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கூறும்போது, “இவ்வழக்கில் போலீஸார் எங்கும் அலட்சியமாக செயல்படவில்லை. புகார் அளிக்க வந்தவர்களிடம் ‘நீ பெரிய கோடீஸ்வரனா’ என தலைமை காவலர் ஒருவர் கேட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தலைமைக் காவலர் சின்னதுரையை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.