Published : 05 Jul 2025 05:44 AM
Last Updated : 05 Jul 2025 05:44 AM
மயிலாடுதுறை: செம்பனார்கோவில் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி நேற்று காரில் சென்றபோது வழிமறித்துக் கொலை செய்யப்பட்டார். பாமக நிர்வாகி கொலையில் தொடர்புடைய இவர், பழிக்குப்பழி வாங்கும் வகையில் கொலை செய்யப்பட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் திருநள்ளாறைச் சேர்ந்தவர் மணிமாறன்(32). தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டப் பொறுப்பாளரான இவர், மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர், பிற்பகலில் காரில் காரைக்கால் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். செம்பனார்கோவில் காலஹஸ்தினாதபுரம் பகுதியில் உள்ள பள்ளி அருகே சென்றபோது,பின்னால் 2 கார்களில் வந்த சிலர், அவரது காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் கார் கண்ணாடியை உடைத்து மணிமாறனை வெளியில் இழுத்துபோட்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு, அவர்கள் வந்த கார்களில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்து வந்த செம்பனார்கோவில் போலீஸார் மணிமாறனின் உடலை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
2021 அக். 22-ம் தேதி காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்த தேவமணி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மணிமாறன் முக்கியக் குற்றவாளியாக இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வந்திருந்தார். எனவே, அந்தக் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் வகையில் இக்கொலை நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT