

குடவாசல் அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர்கள், பள்ளி மாணவிகளிடம் தகராறு செய்ததால் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் இழுத்து மூடினர். மாணவி புகாரின் பேரில் 3 இளைஞர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சரபோஜி ராஜபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது அருந்து நபர்கள் மாலை வேளையில் பேரளம், பூந்தோட்டம் என பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் மாணவிகளிடம் தொடர்ந்து கிண்டல் செய்துவந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மது அருந்திய சிலர், மாணவிகளை கிண்டல் செய்து, அச்சுறுத்தி விரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த சரபோஜி ராஜபுரம் கிராம மக்கள் சிலர் உடனடியாக அங்கு சென்று, டாஸ்மாக் கடையில் உள்ள ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, கடையை மூடினர். இது குறித்து தகவலறிந்து வந்த பேரளம் காவல் ஆய்வாளர் சுகுணா மற்றும் போலீஸார், கடையை மூடியது குறித்து கேட்டபோது, போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, “கடையை ஊர் மக்கள்தான் மூடினோம். மீண்டும் திறந்தால் போராட்டம் நடத்துவோம்” என பொதுமக்கள் தெரிவித்ததால், போலீஸார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதனால், மாலை 5 மணிக்கு மூடப்பட்ட கடை அதன் பிறகு திறக்கப்படவில்லை. இந்நிலையில், அந்த டாஸ்மாக் கடை நேற்று வழக்கம்போல திறக்கப்பட்டு, மது விற்பனை நடைபெற்றது. இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக பிளஸ் 1 மாணவி அளித்த புகாரின் பேரில், மாணவியிடம் தகராறு செய்ததாக வடுகக்குடி மணிமாறன் (22), அஜய் (19). சந்தோஷ்குமார் (21) ஆகிய 3 பேரை பேரளம் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.