

ஆவடி: திருநின்றவூர் நகராட்சியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெண் உறுப்பினர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கணவர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (32). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருநின்றவூர் நகரச் செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கோமதி (28), திருநின்றவூர் நகராட்சியின் 26-வது வார்டு உறுப்பினராகவும் (விசிக), நகராட்சி வரி விதிப்புக்குழு தலைவராகவும் இருந்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்டீபன்ராஜ் - கோமதி தம்பதிக்கு 3 ஆண், ஒரு பெண் என, 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோமதிக்கும், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஸ்டீபன்ராஜூக்கும், கோமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோமதி நேற்று (ஜூலை 3) இரவு 11 மணியளவில், நடுகுத்தகை ஜெயராம் நகர் அருகே நின்று பேசி கொண்டிருந்ததாக ஸ்டீபன்ராஜூக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஸ்டீபன்ராஜ், அவருடைய தம்பி அஜித் (25), உறவினர் அந்தோணி (25) ஆகியோருடன் சம்பவ இடம் சென்று, மனைவி கோமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞர் தப்பிச் சென்றாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, மிகுந்த கோபத்தில் இருந்த ஸ்டீபன்ராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோமதியின் தலை, முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தியதாகத் தெரிகிறது. இதில், படுகாயமடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஸ்டீபன்ராஜ் மற்றும் கொலை சம்பவம் நடந்தபோது, ஸ்டீபன் ராஜூடன் இருந்த அஜித், அந்தோணி ஆகிய 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.