

பூந்தமல்லி: சென்னை, எஸ்ஆர்எம்சி (போரூர்) காவல் நிலையத்தில் நள்ளிரவில் புகார் அளிக்க வந்த நபரைத் தாக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கலை சேர்ந்த சண்முகப்பிரியன் (37), உடலில் ரத்தக் கட்டு, காயங்களுடன் நேற்று முன்தினம் பகலில் சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரிடம் காயங்கள் குறித்து மருத்துவர்கள் விசாரித்துள்ளனர்.
அப்போது, சண்முகப்பிரியன், சென்னை, எஸ்ஆர்எம்சி (போரூர்) காவலர் ஒருவர் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து விட்டு, எஸ்ஆர்எம்சி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து, எஸ்ஆர்எம்சி போலீஸார், சம்பவ இடம் சென்று சண்முகப்பிரியனிடம் விசாரணை மேற்கொண்டபோது, நடவடிக்கைகள் ஏதும் வேண்டாம் என அவர் சமரசமாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காவலரால் தாக்கப்பட்ட நபரின் உடலில் இருந்த காயங்கள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, எஸ்ஆர்எம்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ‘நேற்று முன்தினம் நள்ளிரவில், எஸ்ஆர்எம்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சண்முகப்பிரியன், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்கள் காலையில் புகார் மனுவை அளிக்குமாறு கூறி. நள்ளிரவு நேரம் என்பதால் சண்முகப்பிரியனின் மனைவி மற்றும் குழந்தைகளை ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து, தனது புகாரை ஏற்கக் கோரி, சண்முகப்பிரியன் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், பணியில் இருந்த காவலர்களில் ஒருவரான கணேசன், சண்முகப்பிரியனை பைப்பால் அடித்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என போலீஸார் தெரிவித்தனர். இச்சூழலில், ஆவடி காவல் ஆணையரகம் நேற்று காவலர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளது.