

திருப்பூர்: “அரசியல் காரணமாக போலீஸ் விசாரணையில் நிறைய தொய்வு இருக்கிறது” என்று தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
அவிநாசியில் இளம்பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உடல்நலத்தை காரணம் காட்டி மாமியார் சித்ராதேவியை கைது செய்யவில்லை என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமீன் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கின் புகார்தாரரான ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை எதிர்ப்பு தெரிவித்து, ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஜாமீன் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 4) தள்ளி வைத்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். இது தொடர்பாக ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் அவரது வழக்கறிஞர் மோகன் ஆகியோர் கூறும்போது, “இந்த வழக்கில் கைதான இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் காரணமாக, இவ்வழக்கு விசாரணையில் நிறைய தொய்வு இருக்கிறது. காவல் துறை வழக்கு விசாரணையை தாமதப்படுத்துகிறது. சித்ராதேவியையும் கைது செய்ய வேண்டும். 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே இவ்வழக்கின் முழு விவரமும் தெரியவரும். ரிதன்யாவுக்கு வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இதுவரை கிடைக்கவில்லை” என்றனர்.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து ரிதன்யாவின் பெற்றோர் மனு ஒன்றை அளித்தனர். அதில், “திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதால், விசாரணை எந்தளவுக்கு முழுமையாக நடைபெறும் என்பது எங்களுக்கு தெரியாது. எனவே, இவ்விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, எங்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணனிடம் கேட்டபோது, “நான் யாரையும் சந்தித்து, இந்த விஷயத்தை பேசவில்லை. அரசியல் ரீதியாக யாருக்கும் எவ்வித அழுத்தமும் தரவில்லை” என்றது கவனிக்கத்தக்கது.