புனே: கூரியர் டெலிவரி ஏஜெண்ட் போல நடித்து வீட்டில் புகுந்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை
புனே: புனேவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கூரியர் டெலிவரி ஏஜெண்ட் போல நடித்த நபர், வீடு புகுந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று புதன்கிழமை (ஜூலை 2) மாலை 7:30 மணியளவில் புனே நகரத்தின் கோந்த்வா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயது இளம்பெண் தனியாக இருந்துள்ளார்.
அப்போது ஒரு நபர் கூரியர் டெலிவரி ஏஜெண்ட் என சொல்லிக்கொண்டு அவரது வீட்டிற்குள் நுழைந்தார். இதனையடுத்து, கூரியர் பேப்பரில் கையெழுத்திட அந்த நபர், பெண்ணிடம் பேனா கேட்டுள்ளார். பேனா எடுப்பதற்காக அந்தப் பெண் வீட்டுக்குள் சென்றபோது, அவரும் வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டார். அதன்பின்னர் மயக்கமருந்து கொடுத்து அப்பெண் பாலியன் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய புனே காவல்துறை துணை ஆணையர் ராஜ்குமார் ஷிண்டே, “இரவு 8:30 மணியளவில் சுயநினைவு திரும்பிய அந்தப் பெண்ணுக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை. பின்னர் அந்தப் பெண் தனது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்ததுடன், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.
இது தொடர்பாக நாங்கள் விசாரித்தபோது, அந்த மர்ம நபர் பாதிக்கப்பட்ட பெண் மயக்க நிலையில் இருந்தபோது, பெண்ணின் செல்போனிலேயே செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிடுவேன் என்ற செய்தியை அவரின் போனில் பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளார்.
குற்றவாளி அந்தப் பெண்ணை மயக்கமடையச் செய்ய ஏதாவது ஒரு பொருளைப் பயன்படுத்தியிருக்கலாம். இதற்காக ஏதேனும் ஸ்ப்ரே பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். மேலும், குற்றவாளியின் முகம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஒன்றில் பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு அவரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. குற்றவாளி மீது பிஎன்எஸ் பிரிவுகள் 64, 77 மற்றும் 351(2) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.” என்று தெரிவித்தார்
