

திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை அருகே ஸ்ரீவைகுண்டம் தனிப்படை போலீஸார் எனக் கூறி சீருடை அணியாத இருவர் 17 வயது சிறுவனை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. கழுத்தில் காயமடைந்த அச்சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரை சேர்ந்த அச்சிறுவனை நேற்று முன்தினம் பிற்பகல், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வழிமறித்து, அவரது தந்தையைப் பற்றி விசாரித்ததாகவும், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய தனிப்படை போலீஸார் என தங்களை அறிமுகப்படுத்தி கொண்டதாகவும், அச்சிறுவனின் தந்தையை இடப் பிரச்சினைக்காக தேடுவதாகவும் தெரிவித்துள்ளனர். அப்போது சிறுவன் தப்பிக்க முயன்றபோது, லத்தியால் தாக்கியதில் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும் அச்சிறுவன் புகார் தெரிவித்துள்ளான்.
ஆனால் இந்த புகார் தவறான குற்றச்சாட்டு என தூத்துக்குடி காவல்துறை மறுத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக திருநெல்வேலி மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம். ஆர். காந்தி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் நேற்று இரவில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.