

கல்பாக்கம்: கூவத்தூரை அடுத்த காத்தான் கடை பகுதியில் பெட்ரோல் பங்க் உரிமையாளரை கடந்த ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 3 பேரை கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள 5 பேரைத் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்.
காத்தான் கடை பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு பெட்ரோல் பங்க்கை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, கூவத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கூவத்தூர் பேட்டை பகுதியை சேர்ந்த ரகு (33), தட்சிணாமூர்த்தி (33), ரவீந்திரன் (24) ஆகியோரைக் கைது செய்து, திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது: சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரகு, விசிக கட்சியில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோகன்ராஜின் பெட்ரோல் பங்க்கில் காருக்கு பெட்ரோல் போட்டதாகவும். அதற்கு பணம் வழங்காமல் வாக்குவாதம் செய்ததாகவும் தெரிகிறது.
இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகளை பெட்ரோல் பங்க் உரிமையாளர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால், கட்சியின் தலைமை இவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ரகு பெட்ரோல் பங்க் உரிமையாளரை வெட்டி கொலை செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.