

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலக அதிகாரப்பூர்வ இ-மெயிலுக்கு இன்று மதியம் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் ‘இந்த அலுவலகங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸார், ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இதனால், ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
மேலும், திருச்சி தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவு பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பெற்றோர்கள் பதற்றத்துடன் பள்ளிக்கு வந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.
மாநகர வெடிகுண்டு கண்டறியும் போலீஸார் பள்ளியில் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, மாநகர காவல் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மிரட்டல் இ-மெயில்கள் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் போலீஸ் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்: திருச்சி ஆட்சியர், மாநகராட்சி அலுவலகத்தக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இ-மெயில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள போலீஸ் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ந்து, திருச்சி மாநகரத்தில் உள்ள பிரபல பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்த வண்ணம் இருந்தன. அப்போது ஏதோ அடையாளம் தெரியாத ஒரு தீவில் இருந்து இந்த இ-மெயில்கள் அனுப்பப்படுவதாக கண்டறிந்தனர். இதற்கிடையே, மிரட்டல் இ-மெயில்களும் நிறுத்தப்பட்டன.
இதனால் இவ்விவகாரத்தில் காவல்துறை பெரிய ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் மீண்டும் மிரட்டல் இ-மெயில்கள் வர தொடங்கியிருப்பது திருச்சி மாநகர காவல்துறை வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.