

சென்னை: வங்கியில் கடன் பெற்று ரூ.20 லட்சத்து 75 ஆயிரம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ் பாண்டியன் (62), இவரது மனைவி மேரி ஜாக்குலின் (59).
இவர்கள் இருவரும் தனியாக தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் போலியான ஆவணங்களை கொடுத்து ரூ.20 லட்சத்து 75 ஆயிரம் கடன் பெற்று கடன் தொகையை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்தனர். எழும்பூர் கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, கணவன், மனைவி இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். அவர்கள் இருவரையும் பிடிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சுவாமிதாஸ் பாண்டியன், அவரது மனைவி மேரி ஜாக்குலின் ஆகிய இருவரை போலீஸார் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.