

சென்னை: ரவுடிகளை கண்காணிக்கவும், குற்ற வழக்குகளில் துப்பு துலக்கவும் வெளிநாடுகளைப் போல் சென்னை போலீஸார் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட அனைத்து வகையான குற்றச்செயல்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னையில் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
ரவுடிகள் ஏ, ஏ பிளஸ், சி என 3 ஆக வகைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னையில் சுமார் 3,400 ரவுடிகள் போலீஸாரின் அதிதீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவர்களது பெயர், வயது, முகவரி, குற்றப் பின்னணி, கூட்டாளிகள், எதிர் தரப்பினர் என அனைத்து தகவல்களும் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் சிறையில் உள்ளார்களா? வெளியே உள்ளார்களா? சொந்த இடத்திலிருந்து வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனரா? எனவும் தகவல் சேகரிக்கப்படுகிறது.
இதற்காக, சென்னை போலீஸார், வெளிநாடுகளைப் போல் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஒரு ரவுடியை பற்றிய விவரத்தை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள ஏஐ தொழில்நுட்பம் அவர்களுக்கு கைகொடுக்கிறது.
சம்பந்தப்பட்ட ரவுடிக்கு ஏற்கெனவே ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினை, அதற்கு அவர் எந்தெந்த மருத்துவமனையில் எந்தெந்த தேதியில் சிகிச்சை பெற்றார், எத்தனை முறை குண்டர் சட்டத்தில் கைதானார், எந்தெந்த சிறைகளில் அடைக்கப்பட்டார், எந்தெந்த நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது, எத்தனை முறை ஜாமீன் மற்றும் பரோலில் வெளியே வந்துள்ளார், எத்தனை குற்றங்களில் தண்டனை பெற்றுள்ளார் உட்பட அனைத்து விவரங்களையும் ஏஐ துல்லியமாக தெரிவித்து விடுகிறது.
அது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட வணிக வீதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் சம்பந்தப்பட்ட ரவுடி அல்லது குற்றவாளி உள்ளாரா? என்பதையும், எந்தெந்த நேரத்தில் எங்கிருந்தார் என்பதையும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து ஏஐ தொழில்நுட்பம் போலீஸாருக்கு துல்லியமாக காட்டிக் கொடுத்துவிடுகிறது. இதேபோல், குற்ற வழக்குகளில் துப்பு துலக்கவும், வழக்கு விவரங்களை விரைவாக தெரிந்துகொள்ளவும் சென்னை போலீஸார் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது தங்களுக்கு பெரிய அளவில் உதவியாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
குற்ற முன்னறிவிப்பு, தடுப்பு: எந்தெந்த பகுதிகளில் எந்த வகையான குற்றம் எந்த நேரத்தில் நடைபெற்றது போன்ற வரலாற்று குற்றத் தரவு, மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற பெரிய தரவுத் தொகுப்புகளை ஏஐ பகுப்பாய்வு செய்து போலீஸாருக்கு முடிவுகளை வழங்குகிறது.
அதை அடிப்படையாக வைத்து எந்த பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது, அதுவும் எந்த வகையான குற்றச் செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்பதை போலீஸார் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடிகிறது. அதன் பிறகு, சம்பந்தப்பட்ட இடங்களில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தியும், கண்காணிப்பை அதிகரித்தும் குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்க போலீஸாருக்கு ஏஐ கைகொடுத்து வருகிறது.
போக்குவரத்து காவலில் ஏஐ: சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறியவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சில கேமராக்களில் ஏஐ தொழில்நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது.
அவை கார்களுக்குள் ஓட்டுநர்களைத் துல்லியமாக கண்காணிக்கின்றன. சீட் பெல்ட் அணியாமல் உள்ளனரா? செல்போனில் பேசியபடி கார் ஓட்டுகின்றனரா? என்பதைக் கண்டறிந்து புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவிடுகின்றன. அதை அடிப்படையாக வைத்து போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கின்றனர்.