

சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியில் வசிப்பவர் ஜன்னத் கனி (53). இவரது கணவர் ஸ்டீபன் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். கடந்த 26-ம் தேதி ஸ்டீபன் அவரது மனைவி ஜன்னத் கனியை தொடர்பு கொண்டு புதுச்சேரியில் இருப்பதாகவும் அவசரமாக ரூ.1 லட்சம் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
போலீஸில் புகார்: இதையடுத்து, ஜன்னத்கனி ரூ.1 லட்சத்தை அவரது கணவருக்கு ஜீபேமூலம் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் வெகு நேரமாகியும் கணவர் வீடு திரும்பாததால் செல்போனில் அழைத்தார். ஆனால் செல்போன் சுவிட்ச்-ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ஜன்னத் கனி, கணவரை கண்டுபிடித்துத் தருமாறு முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
முதல்கட்ட விசாரணையில், பணத்தகராறில் ஸ்டீபனை ஒரு கும்பல் புதுச்சேரிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆள் கடத்தல் பிரிவின்கீழ் வழக்குப் பதியப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திருவான்மியூரைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் (41), புதுச்சேரியைச் சேர்ந்த சத்தியராஜ் (38), அதே மாநிலத்தைச் சேர்ந்த முருகன் (40) ஆகியோர் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து புதுச்சேரி விரைந்த தனிப்படை போலீஸார், ஸ்டீபனை மீட்டதோடு அவரை கடத்தி பணத்தை பறித்த3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பிரேம் ஆனந்த் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரேம் ஆனந்துக்கு ஸ்டீபனின் அறிமுகம் கிடைத்துள்ளது. பிரேம் ஆனந்துக்கு சுங்கத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஸ்டீபன் ரூ.4 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் பேசியபடி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. அதற்காக பெற்ற பணத்தையும் திரும்ப கொடுக்காமல், தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த், அவரது நண்பர்கள் மூலம் திட்டமிட்டு ஸ்டீபனை புதுச்சேரிக்கு காரில் கடத்திச் சென்று பணத்தை கேட்டு மிரட்டி தாக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.