

அவிநாசி அருகே திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து சேவூர் போலீஸாரும், கோட்டாட்சியரும் விசாரிக்கின்றனர்.
அவிநாசி அருகே கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கவின்குமார். இவரது மனைவி ரிதன்யா (27). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணமானது. குடும்பத் தகராறு காரணமாக அவிநாசியில் இருந்து காரை தனியே ஓட்டி வந்த ரிதன்யா, மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காரை நிறுத்தி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சேவூர் போலீஸார் விரைந்து வந்து, ரிதன்யாவின் உடலைக் கைப் பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சேவூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். திருமணமான 3 மாதங்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியரும் விசாரித்து வருகிறார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு ‘வாட்ஸ்-அப்’-ல் ஆடியோ அனுப்பி உள்ளார். அதில், தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கணவரும், அவரது குடும்பத்தினரும் சித்ரவதை செய்ததாக ரிதன்யா கூறியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, ஆடியோவை கைப்பற்றி, கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
அவிநாசி அரசு மருத்துவமனை முன்பு ரிதன்யாவின் உறவினர்கள் திரண்டனர். அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அவிநாசி போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.