

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.2.26 கோடி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகரில் வசிப்பவர் தொழில் அதிபர் கிஷோர். இவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அண்மையில் தகவல் ஒன்று வந்தது. அதில், ‘எங்களது வாட்ஸ்-அப் குழுவில் சேர்ந்து நாங்கள் ஆலோசனை கூறும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உண்மையென நம்பிய கிஷோர், அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலைதளத்தில் சேருவதற்காக அவருக்கு வந்த வாட்ஸ்-அப் குழுவில் சேர்ந்துள்ளார். பின்னர் மோசடி நபர்கள் அனுப்பிய லிங்க் (Link) மூலமாக ஆன்லைன் பங்கு வர்த்தக வலைதளத்தில் கிளிக் செய்து, பல்வேறு வங்கிக் கணக்குகளில் பல பரிவர்த்தனைகளில் ரூ.2 கோடியே 26 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு லாபமும் கிடைக்கவில்லை, முதலீட்டு பணமும் திரும்ப கிடைக்கவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக மோசடி கும்பலின் கூட்டாளிகள் திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் பதுங்கியிருப்பது தெரிந்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் சத்தியநாராயணன் (60), மணிவேல் (25), ரோஷன் (35) மற்றும் சிம்சன் செல்லதுரை (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மோசடி கும்பல் தாங்கள் மோசடி செய்யும் பணத்தை தற்போது கைது செய்யப்பட்ட 4 பேரின் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வைத்து, அவர்கள் மூலம் பணத்தை தங்களுக்கு அனுப்ப வைத்துள்ளனர். இதற்காக தற்போது கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் கமிஷன் கொடுத்துள்ளனர். மோசடிக்கு மூளையாக உள்ள கும்பல் வெளிநாடுகளிலிருந்து இயங்கி வருகிறது. அந்த கும்பல் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
உதவி எண் 1930: பொதுமக்கள் யாரேனும் இதுபோன்று இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தால் உடனடியாக தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண் 1930-க்கு தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும் அல்லது https.www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்ய வேண்டும் எனக் காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.