

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள சாலைப்புதூர் நவநீதகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (58). இவர் அடைக்கலப்பட்டணம் பகுதியில் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளி, பி.எட். கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். தனது குடும்பத்தினருடன் பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டில் வசிக்கிறார்.
இந்நிலையில், அவர் குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியூர் சென்றிருந்தார். நேற்று காலையில் அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டில் பீரோ திறக்கப்பட்டு, ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த ஆலங்குளம் போலீஸார் அங்கு சென்று, ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “திருட்டில் ஈடுபட்டது யார், எவ்வளவு நகை, பணம் திருடப்பட்டது என்று விசாரித்து வருகிறோம். மேலும், தனிப்படைகள் அமைத்து, திருடர்களைத் தேடி வருகிறோம்” என்றனர்.