

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், 4 தனிப்படைகள் அமைத்து போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் 17 வயது தம்பியை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன் மூர்த்தி, போலீஸ் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன் மூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து, ஏடிஜிபி-யை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பூவை ஜெகன் மூர்த்திக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராம் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், கைது உத்தரவை ரத்து செய்தும், பூவை ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை வேறு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இதுவரை கைதானவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலம் போன்ற விவரங்களை, திருவாலங்காடு போலீஸாரிடம் பெற்று, சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், பூவை ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கைது செய்யப்படுவோம் என எண்ணிய பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 4 தனிப்படைகள் அமைத்து போலீஸார் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.