உணவகத்தில் உணவு வாங்கி தராவிட்டால் நடவடிக்கை: நீதிபதியின் மகள் என போலீஸாரை மிரட்டியதாக பெண் காவலர் கைது 

உணவகத்தில் உணவு வாங்கி தராவிட்டால் நடவடிக்கை: நீதிபதியின் மகள் என போலீஸாரை மிரட்டியதாக பெண் காவலர் கைது 
Updated on
1 min read

சென்னை: நீதிபதியின் மகள் என போலீ ஸாரை மிரட்டியதாக பெண் காவலர் கைது செய்யப்பட்டார். சென்னை செம்பியம் காவல் நிலையத்தை போனில் தொடர்பு கொண்டு பெண் ஒருவர் பேசினார். அவர், தான் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் எனவும், செம்பியத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டதற்கான கட்டணம் ரூ.1,500-ஐ செலுத்திவிடுமாறும் கூறியுள்ளார். உடனே அந்த காவல் நிலைய போலீஸார், பணத்தை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அந்த பெண் மீண்டும் செம்பியம் காவல் நிலைய தொலைபேசிக்கு எண்ணில் தொடர்பு கொண்டு, செம்பியத் தில்தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் கட்டணத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட செம்பியம் காவல் நிலைய போலீஸார், அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் மீண்டும் தொடர்பு கொண்டு, தனக்கு அங்குள்ள ஒரு உணவகத்தில் உணவு வாங்கித் தரவேண்டும். இல்லையென்றால் செம்பியம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீஸார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

முதல்நிலை காவலர்: இதைக்கேட்ட போலீஸார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்தப் பெண் தங்கியிருப்பதாக கூறிய விடுதியில் உயர் அதிகாரிகள், சோதனையிட்டனர். அப்போது நீதிபதியின் மகள் என மிரட்டிய பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், பெரம்பூர் அகரத்தைச் சேர்ந்த ரேகா (45) என்பதும், சென்னை காவல்துறையில் முதல் நிலைக் காவலராக இருந்திருப்பதும், கடைசியாக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை பணிபுரிந்துவிட்டு பணிக்கு வராமல் நின்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் ரேகாவைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in