

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குறி கேட்க வந்தவரை கத்தியால் குத்திய பூசாரி கைது செய்யப்பட்டார். குன்னூர் அருகேயுள்ள தூதூர்மட்டம் மகாலிங்க காலனியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ் (40). அதே பகுதியை சேர்ந்த பூசாரி சிவக்குமார் (54), மக்களுக்கு குறி சொல்லி பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில், சிவக்குமாரை சந்தித்த நாகராஜ், குறி கேட்டுள்ளார். ஆனால், மது போதையில் இருந்த பூசாரி சிவக்குமார், திருநீறு, குங்குமம் ஆகியவற்றை நாகராஜ் மீது வீசினார்.
இதில் நிலைதடுமாறிய நாகராஜின் தலை, நெற்றியில் கத்தியால் சிவக்குமார் குத்தினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக கொலகம்பை போலீஸார் விசாரணை நடத்தி, பூசாரி சிவக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.