

சென்னை: போதைப் பொருள் வழக்கில் மூன்றெழுத்து நடிகர்கள் இருவர், நடிகைகள், நான்கெழுத்து இசை அமைப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்த விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வாட்ஸ்அப் குழு மூலம் போதைப்பொருள் யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்ற தகவலை தனிப்படை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23-ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘தீங்கிரை’ திரைப்படத்தை தயாரித்த மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் தனக்கு போதைப் பொருள் பழக்கம் ஏற்பட்டதாகவும், ‘கழுகு’ திரைப்பட நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தியதாகவும், அவர் மேலும் சிலருக்கு போதைப் பொருளை கைமாற்றியதாகவும் தெரிவித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து போதைப் பொருள் சப்ளையரான சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்த ஜெஸ்வீர் என்ற கெவினும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள், போதைப்பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து அது சம்மந்தமாக கருத்து பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றையும் பகிர்ந்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, கெவின் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களை அமைத்து அதன்மூலம் போதைப்பொருளை விநியோகம் செய்துள்ளார். அவரது தொடர்பில் பல்வேறு நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு துறை பிரபலங்கள், மிகவும் பிரபலமான மூன்றெழுத்து நடிகர்கள் இருவர், பிரபல நடிகைகள், நான்கெழுத்து இசை அமைப்பாளர் ஒருவர் என பல்வேறு நபர்கள் மற்றும் பிரபலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதுகுறித்த விபரங்களை சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர். மேலும் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக சில ரகசிய குறியீடு (கோட் வேர்ட்) வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரங்களையும் போலீஸார் திரட்டி வருகின்றனர்.
மேலும் தகவல்களை திரட்டும் வகையில் ஏற்கெனவே அடிதடி வழக்கில் சிறையில் உள்ள படத்தயாரிப்பாளர் பிரசாத், சங்ககிரி பிரதீப்குமார், நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.