

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் உடன்குடி பேரூராட்சி பெண் கவுன்சிலர் உயிரிழந்தார். உடன்குடி நடுக்கரை தெரு பகுதியைச் சேர்ந்த அசோகன் மனைவி அன்புராணி (55). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், உடன்குடி பேரூராட்சியில் 8-வது வார்டு உறுப்பினராக பணியாற்றி வந்தார்.
நேற்று அதிகாலையில் மருத்துவ பரிசோதனைக்காக தனது காரில் மகன் நேரு (31), மருமகள் இந்து (27) ஆகியோருடன் மதுரையி்ல் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.
காரை நேரு ஓட்டினார். எட்டயபுரத்தை அடுத்த மேலக்கரந்தை அருகே முன்னால் சென்ற டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் அன்பு ராணி காயமடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாசார்பட்டி காவல்நிலைய போலீஸார், அன்புராணியை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மாசார்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து. டிராக்டர் ஓட்டுநர் எட்டயபுரம் ராஜா நகரை சேர்ந்த சரவணன் மகன் மகாராஜன் (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.