

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் ஜோதிடரின் ரூ.3 கோடி மதிப்புடைய காலிமனையை அபகரித்த குற்றச்சாட்டில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்தவர் ஜோதிடர் சிவகுமார். இவருக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புடைய காலிமனை திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் அருகில் விஜயநல்லூரில் இருந்தது. இதை சிலர் போலி ஆவணங்கள் தயார் செய்து, ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்து வேறு நபருக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டனர்.
சிவகுமார் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 2012-ம் ஆண்டு புகார் தெரிவித்தார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக இந்த மோசடி தொடர்பாக கிருஷ்ணன் என்பவரை அதே ஆண்டில் கைது செய்தனர்.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (64) தலைமறைவானார். இந்நிலையில், 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திருவல்லிக்கேணியில் பதுங்கி இருந்தபோது நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.