க்ரைம்
ஸ்ரீவில்லிபுத்தூர் | ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் 3 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலின் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் மற்றும் சில அர்ச்சகர்கள் மதுபோதையில் வீட்டில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 3 அர்ச்சகர்களையும் கோயில் பணியிலிருந்து நீக்கியும், அவர்கள் பூஜை உள்ளிட்டவற்றில் தலையிட தடை விதித்தும் அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கறிஞர் பாண்டியராஜன் என்பவர் அளித்த புகாரின் பேரில், ஆபாசமாக நடனமாடியதாக அர்ச்சகர்கள் கோமதி விநாயகம் (30), வினோத் (32), கணேசன் (38) உள்ளிட்டோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியதாக சபரிநாதன் (38) என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
