

சென்னை: ‘கெவின் என்பவரிடமிருந்து நடிகர் கிருஷ்ணா போதைப் பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் தனது நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருந்திருக்கிறார். மேலும் போதைப் பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து அது சம்பந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப் பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்” என்று காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில் கடந்த மே 22-ம் தேதி அன்று மது அருந்தச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரதீப்குமார், கானா நாட்டைச் சேர்ந்த ஜான், பிரசாத் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, நண்பர்களுக்கும் அளித்த நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவும், போதைப் பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, விற்பனை செய்யும் கெவின் என்பவரும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரிகள் தேடப்பட்டு வந்த நிலையில், தொடர் விசாரணை காரணமாகவும் அறிவியல்பூர்வ, தொழில்நுட்ப ரீதியான சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் ஜெஸ்வீர் (எ) கெவின் என்பவர் இன்று ( ஜூன் 26) கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து கொக்கைன் 1/2 கிராம், மெத்தபெட்டமைன் - 10.30 கிராம், எம்டிஎம்ஏ 02.75 கிராம், OG கஞ்சா 2.40 கிராம், கஞ்சா 30 கிராம், OC பேப்பர் 40 கிராம், ஜிப்லாக் கவர் - 40 கிராம், 2 சிறிய எடைப்பார்க்கும் கருவிகள்,லேப்டாப், செல்போன் மற்றும் ரூ.45,200 கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் நடிகர் கிருஷ்ணா, கெவின் என்பவரிடமிருந்து போதைப் பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருந்திருக்கிறார். மேலும் போதைப் பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து அது சம்பந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப் பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்.
இவர்களுடைய வங்கி பணப் பரிவர்த்தனை மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில் நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொக்கைன், ஓஜி கஞ்சா மற்றும் பிற போதைப் பொருளை கடத்துவது, தன் வசம் வைத்திருப்பதும், உட்கொள்வதும், மற்றவர்களுக்கு கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். போதைப் பொருளை வைத்திருப்பவர்களை பற்றிய தகவல் தெரிந்தும், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாக கருதப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.