திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: 7 தனிப்படைகள் அமைப்பு - நடந்தது என்ன?

பாலமுருகன்
பாலமுருகன்
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் குமரானந்தபுரம் காமராஜர் வீதியில் வசித்து வந்தவர் பாலமுருகன்(30). பனியன் தொழில் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலமுருகனுக்குத் திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் அருகே நண்பர்கள் 3 பேருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், பாலமுருகனை அரிவாளால் வெட்டினர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பித்து ஓட அவர் முயற்சித்தபோது, அந்தக் கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்தது.

இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் பிரவின் கவுதம் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, கொலையின்போது உடனிருந்த நண்பர்கள் 3 பேரிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.

பாலமுருகனின் உடல், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்து முன்னணி பிரமுகர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணியினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்பகை காரணமா? - இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “இந்து முன்னணியில் ஏற்கெனவே பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட குமரானந்தபுரத்தைச் சேர்ந்த சுமன்(34) மற்றும் தற்போதைய பொறுப்பாளரான, கொலை செய்யப்பட்ட பாலமுருகனுக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது.

எனவே, இந்த வழக்கு தொடர்பாக, தனிப்படை போலீஸார் கேரள மாநிலம் பாலக்காட்டில் சுமன் மற்றும் அவரது நண்பரான திருப்பூரைச் சேர்ந்த தமிழரசன்(26) ஆகியோரை பிடித்து விசாரித்து வருகிறோம். மேலும், தலைமறைவான நரசிம்மபிரவின் (29), அஸ்வின் (29) ஆகியோரைத் தேடி வருகிறோம்” என்றனர்.

இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் கூறும்போது, “இந்து முன்னணி அமைப்பில் சுமன் இருந்தார். தற்போது இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். பாலமுருகன் கொலையில் சுமன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதனால், உரிய முறையில் விசாரிக்க வேண்டும். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in